தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2010-11)சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயிலும் 182 முதல் தலைமுறை மாணவர்கள் செலுத்திய 1.25 லட்சம் கல்விக் கட்டணம் திரும்ப அளிக்கப்பட உள்ளது.இதேப்போன்று சுயநிதி பல் மருத்தவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் சேர்ந்து படித்து வரும் 169 முதல் தலைமுறை மாணவர்களுக்கு தலா ரூ.40,000 திரும்ப அளிக்கப்படுகிறது.
இதற்காக ரூ.2,95,10,000ஐ தமிழக அரசின் நிதித் துறை ஒதுக்கியுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சி. வம்சதாராவுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை மொத்தமாக வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் பற்று வைக்கப்பட்டுள்ளது. எனவே 2010-11ம் கல்வியாண்டில் கல்விக் கட்டணம் செலுத்தி படித்து வரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மாணவர்கள் அனைவரும் தற்போது இரண்டாமாண்டு படித்து வருகிறார்களா என்பதை உறுதி செய்து அவர்களுக்குரிய தொகையை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கவும்.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயிலும் முதல் தலைமுறை மாணவர்களின் விவரங்களையும், அவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரத்தையும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று சுகாதாரத் துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment